பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1
By: TeamParivu Posted On: December 25, 2023 View: 33

என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை.
48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். அது ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும்.
நான் சபரிமலைக்குப் போய்வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், இந்த நிமிடம் வரைக்கும் நேற்று நடந்ததுபோல, நான் மலைக்கு மிகவும் பக்கத்தில் இருக்கிறது போன்றதான ஓர் அதீத மன உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட அலையலையாக வந்துகொண்டிருந்த ஐயப்பமார்களின் நடமாட்ட சத்தங்களும் சரண கோஷங்களும் பஜனைப் பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
நாங்கள் நடந்துகொண்டே இருப்பதாகவும், வானுயுர நெடிதுயர்ந்த மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து மண்டிக் கிடந்த வழுக்கு மலைப் பாதைகளை தாண்டி சென்று கடப்பதாகவும் நினைவினில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ‘அடுத்த யாத்திரை எப்போது?’ என இப்போது மனது தேடி அதை நோக்கி ஓடுகிறது. அந்த அளவுக்கு சங்கர மோகினி புத்திர பாலனின் மோகனத்தால், ஆழ்நிலைப் பரவசத்தில் ஆட்பட்டு அகப்பட்டுக் கொண்டேன்.அதுவும் அன்று கரிமலை கரிவிலந்தோடு அடிவாரத்தில் தங்கியிருந்த அந்த இரவு... ஒருவித அனுபவத்தை தந்திருந்தது. அனைவராலும் மறக்க முடியாததாக இருக்கிறது. இப்படி ஒரு மிரட்டல் அனுபவம் கிடைக்குமென்று குழுவில் பயணித்த யாருக்கும் அன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் கரிமலையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். வழியில் காடு, மலை என ஏறி, இறங்கி சுமார் 6 மைல் தூரம் நடந்து, அழகிய வனத்தில் இருந்த ‘காளைகட்டி’ சிவபார்வதி ஆலயம் சென்று அடைந்தோம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவபெருமான், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இந்த இடத்துக்கு ‘காளைகட்டி’ என்ற பெயர் ஏற்பட்டது.
‘காளைகட்டி’ சிவ பார்வதி ஆலயத்தின் தனிச் சிறப்பாக வெடி வழிபாட்டினைக் கூறுகிறார்கள். வேண்டி வரும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர் பெயர் சொல்லி, வெடி வேட்டு வெடிக்க செய்தால் குடும்ப கஷ்டம், சங்கடம், சஞ்சலம், எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது இங்கு நம்பிக்கை. பக்தர்கள் வெடி வழிபாட்டுக்கு டோக்கன் வாங்கியதும் கோயில் பிரதான பிரகார கவுன்டரில் இருந்து மலையின் உச்சியில் இருந்து வெடி வெடிப்பவருக்கு மைக் மூலம் டோக்கன் வாங்கிய ஐயப்ப பக்தரின் பெயர் சொல்லி, அவரது குடும்பம் செழித்து தழைத்தோங்கி சந்ததிகள் பல்கி பெருகி சகல செளந்தர்ய செளபாக்கிய வாழ்வு பெற வேண்டும் என்று கூறி... ‘ஒரு வெடி வெடிக்கட்டும்’ என்று மலையாளத்தில் சம்சாரிக்கப்படுகிறது. அடுத்த நிமிடத்தில் அந்த மலைக்காடெங்கும் வேட்டு வெடித்து அதிர்கிறது. ‘காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா!’ என்று கோஷமிட்டபடி, வேட்டு வெடித்த மகிழ்ச்சியில், ஐயப்பன்மார்கள் அனைவரும் மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..